இறந்துவிட்டதாகத் தகனம் செய்யப்பட்ட மகன் 15 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா பகுதியில், காணாமல் போன தன் மகன் இறந்துவிட்டதாகத் கருதி இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்த பெற்றோருக்கு, அவர் சிறையில் உயிருடன் இருப்பது தெரியவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவைச் சேர்ந்த ரவிக்குமார் (35) என்பவர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் ஆகஸ்ட் 11 அன்று கபூர்தலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையில், அப்பகுதியில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தைக் அடையாளம் காட்டுமாறு போலீசார் ரவிக்குமாரின் குடும்பத்தினரிடம் புகைப்படங்களைக் காட்டியுள்ளனர். முக அடையாளம் காண முடியாத அளவுக்குச் சடலம் சிதைந்திருந்தாலும், அது அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டு அது ரவிக்குமார் தான் என அவரது குடும்பத்தினர் தவறாக நம்பி உறுதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13 அன்று அந்தச் சடலத்தைத் தகனம் செய்த குடும்பத்தினர், அதன்பிறகு இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்தனர்.
தங்கள் மகன் இறந்து விட்டதாகத் துயரத்தில் மூழ்கியிருந்த குடும்பத்தினருக்குச் செப்டம்பர் 2ம் தேதி அன்று கபூர்தலா மத்திய சிறைச்சாலையிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய சிறைத்துறை அதிகாரி, ரவிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜலந்தர் காவல்துறையினரால் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ரவிகுமார், அன்றைய தினமே கபூர்தலா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் பெரும் குழப்பமும் அடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், மறுநாள் உடனடியாகச் சிறைக்குச் சென்று நேரில் பார்த்தபோது, ரவிக்குமார் உயிருடன் இருப்பதைக் கண்டு பேச்சற்றுப் போயினர்.
தங்கள் மகன் என்று நினைத்து வேறொருவரின் சடலத்தைத் தகனம் செய்ததை உணர்ந்து அதிர்ந்து போன குடும்பத்தினருக்கு இது ஒருபுறம் நிம்மதியையும் மறுபுறம் பேரதிர்ச்சியையும் தந்துள்ளது. தற்போது, அந்தப் பெற்றோர் தகனம் செய்த அந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்தும், இந்தத் தவறு எப்படி நேர்ந்தது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.