சோனியா காந்தி உடல்நிலைக் குறித்து மருத்துவமனை அறிக்கை!
புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள 'சிஸ்டமிக் இன்ஃபெக்ஷன்' எனப்படும் உடல் ரீதியான தொற்றுக்கு ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் டி.எஸ். ராணா தலைமையிலான நிபுணர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் மாசு கலந்த வானிலை மாற்றத்தால் அவருக்கு மூச்சுக்குழாய் ஆஸ்துமா பாதிப்பு சற்று அதிகரித்ததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயிறு மற்றும் சிறுநீரகப் பாதையில் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய கூடுதல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனது தாயாரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கேரளா பயணத்தை ரத்து செய்துவிட்டு, இன்று காலை மருத்துவமனைக்குச் சென்று சோனியா காந்தியைச் சந்தித்தார். அங்கு நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நேற்று சோனியா காந்தி கவலையளிக்கும் நிலையில் இருப்பதாகச் சில வதந்திகள் பரவிய நிலையில், தற்போதைய மருத்துவமனை அறிக்கை அவர் நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.