மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரளா பிரசாரப் பயணம் திடீர் ரத்து!
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக, கேரளாவில் இன்று நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரப் பணிகளை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார். நேற்று இரவு சுமார் 10:22 மணியளவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டெல்லியில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக அவருக்குச் சுவாசப் பாதையில் அசௌகரியம் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வயிற்றில் தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கேரளச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். மாலை 4:30 மணிக்குக் கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்காகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாயார் சோனியா காந்தியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ராகுல் காந்தி தனது பயணத்தைத் ரத்து செய்துவிட்டு டெல்லியிலேயே தங்கியுள்ளார்.
ராகுல் காந்திக்கு பதிலாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கேரளா சென்று கோழிக்கோடு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கேரள சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) தனது தேர்தல் வாக்குறுதிகளை இந்த மேடையில் விளக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.