"பாஜக கூட்டணியில் இருந்து விலகும் தென் இந்திய பார்வர்டு பிளாக்?!

 

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வரும் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, தற்பொழுது தமிழக பாஜக தலைமை மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, கூட்டணியில் தங்களுக்கு நேர்ந்து வரும் அசாத்திய அரசியல் நெருக்கடிகள் குறித்துப் பேசுகையில், "கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உண்மையான தோழமையுடன் நீடித்து வருகிறோம். ஆனால், சமீபகாலமாகத் தமிழக பாஜக தரப்பில் இருந்து எங்களுக்குப் பல்வேறு இன்னல்கள் தரப்பட்டு வருகின்றன. எங்களின் அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சில நிகழ்வுகள் அரங்கேறுகின்றன."

கூட்டணியில் நீடிப்பதற்குத் தற்போதைய தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகள் உகந்ததாக இல்லை என்று குறிப்பிட்ட திருமாறன், அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்லத் தவறிய தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைமை மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

"நாங்கள் இந்தக் கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமைதான் இனிச் சிந்திக்க வேண்டும்" என்று மிகக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே மதிமுக, தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அதிரடி கூட்டணி மாற்றங்களால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படும் சூழலில், தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, பாஜக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகப் போகிறதா என்ற விவாதத்தைத் தோற்றுவித்துள்ளதுடன், கமலாலய வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.