சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து பாய்ந்த பஸ்… தென்கொரியாவில் 57 பேர் காயம்!
தென்கொரியாவில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பஸ், போக்குவரத்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த 31 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 57 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென்கொரியா தலைநகர் சியோலுக்கு தெற்கே உள்ள சியோங்னாம் நகரின் புந்தாங் பகுதியில் புதன்கிழமை (நவம்பர் 11) காலை சுமார் 7.34 மணியளவில் இந்த விபத்து நடந்தது. போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் காத்திருந்தபோது, பின்னால் வந்த பயணிகள் பஸ் திடீரென அவற்றின் மீது மோதியது.
இந்த விபத்தில் 4 பஸ்கள், ஒரு சரக்கு லாரி மற்றும் 27 கார்கள் என மொத்தம் 32 வாகனங்கள் சிக்கின. சுமார் 100 முதல் 150 மீட்டர் தூரம் வரை வாகனங்கள் மீது மோதிச் சென்ற பஸ், இறுதியில் சாலையின் நடுவிலிருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
விபத்தில் காயமடைந்த 57 பேரில் 9 பேருக்கு பலத்த காயமும், 48 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஸ்சின் பிரேக் செயலிழந்ததாக ஓட்டுநர் போலீசாரிடம் கூறியுள்ளார். அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது சோதனையில் தெரியவந்தது. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.