முதியவர் கண்களில் உயிருடன் 11 புழுக்கள்! மருத்துவர்கள் கண்டறிந்த அரிய தொற்று

 

 

தென்கொரியாவில் 71 வயது முதியவர் ஒருவரின் இரு கண்களிலும் உயிருடன் இருந்த 11 ஒட்டுண்ணிப் புழுக்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களாகக் கண்களில் ஏதோ உறுத்துவது போன்ற உணர்வு, சிவந்து போதல், பார்வை மங்குதல் ஆகிய பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கண் இமைக்கும் கருவிழிக்கும் இடையிலான பகுதியில் புழுக்கள் அசைவதைக் கண்டறிந்தனர்.

கண் சொட்டு மருந்து மூலம் மரத்துப்போகச் செய்த பின்னர், நுண்ணிய கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு புழுவாக அகற்றினர். மொத்தம் 11 புழுக்கள் அகற்றப்பட்டன. அவை 11 முதல் 20 மில்லி மீட்டர் நீளமுள்ள 'தெலாசியா காலிபேடா' (Thelazia callipaeda) என்ற ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

இந்தப் புழுக்கள் ஈக்கள் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவக்கூடியவை. சிகிச்சைக்குப் பிறகு முதியவரின் கண் பாதிப்பு குறைந்தது. இரண்டு மாதத் தொடர் கண்காணிப்பிலும் மீண்டும் தொற்று ஏற்படவில்லை.இந்த அரிய மருத்துவச் சம்பவம் தொடர்பான ஆய்வறிக்கை, நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.