தென் கொரியாவில் நிலச்சரிவு... கட்டிடத்தின் மீது மண் சரிந்து ஒருவர் பலி!
தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கியோஜே பகுதியில் சில மணி நேரங்களிலேயே 500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. இந்த அதீத மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மலைப்பகுதி பலவீனமடைந்தது. இதையடுத்து ஒக்போ-டோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது.
மலைப்பகுதியில் இருந்து சரிந்து விழுந்த டன் கணக்கிலான மண் மற்றும் பெரும் பாறைகள் மலையடிவாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது விழுந்தன. இதனால் அந்த கட்டிடத்தின் முதல் தளம் வரை முழுமையாக மண் மூழ்கடித்துக் கொண்டது. இந்த அதிர்ச்சி தரும் விபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதிநவீன கருவிகள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.