சௌகார் ஜானகி மறைவு: திரையுலக, அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி!

 

வயது மூப்பு காரணமாகக் காலமான பத்மஸ்ரீ சௌகார் ஜானகி (94) அவர்களின் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய்: "பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவருமான சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்."திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்த அவர் பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்குப் பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

சீமான் (நாம் தமிழர்) : பழம்பெரும் திரைக்கலைஞர், பெருமதிப்பிற்குரிய அம்மா சௌவுகார் ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்

நடிகர் சரத்குமார்:

"தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தென்னிந்தியத் திரையுலகிற்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு."

நடிகை ராதிகா:

"சுதந்திரமான, மன உறுதி கொண்ட ஒரு முன்னோடி அவர். என் தந்தை எம்.ஆர்.ராதாவுடன் மிக நெருங்கிய தோழியாக இருந்தவர். அத்தகைய சாதனைப் பெண்மணிக்கு என் அஞ்சலி."

ஏவிஎம் நிறுவனம்: 

"1955 முதல் 1987 வரை எங்களது பல திரைப்படங்களில் நடித்து ஏவிஎம் குடும்பத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தவர். அவரது நளினமும் சினிமா பங்களிப்பும் என்றும் போற்றப்படும்."

நடிகை சிம்ரன், சாக்‌ஷி அகர்வால்:

"தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் நபர். தலைமுறைகளைக் கடந்த அவரது திரைப் பயணம் இனி வரும் நடிகர்களுக்குப் பெரும் பாடமாக இருக்கும்."

ஜூனியர் என்.டி.ஆர், எஸ்.வி.சேகர்: "இந்தியத் திரையுலகில் அழியாத முத்திரையைப் பதித்த கலை ஆளுமை. டிஜிட்டல் உலகம் உள்ளவரை அவரது கலை வாழும்."

கனிமொழி எம்.பி: "400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த மூத்த கலைஞரின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது."

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): "பல்வேறு மொழிகளில் தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவரது மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்."

அன்புமணி ராமதாஸ் (பாமக): "எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் தொட்டு அனைத்துத் தலைமுறை நடிகர்களுடனும் நடித்து முத்திரை பதித்த கலைத்தாய்க்கு அஞ்சலி."

மத்திய அமைச்சர் எல்.முருகன், கே.அண்ணாமலை: "பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி விருதுகளால் கௌரவிக்கப்பட்ட கலை ஆளுமை. தனது சிறப்பான நடிப்பாலும் சமூக சேவைகளாலும் மக்களின் மனதில் நிலைத்து நிற்பார்."