மணிக்கு 8,700 கி.மீ வேகத்தில் நிலவில் மோதிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ... பரபரப்பு வீடியோ!
விண்வெளியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகச் சுற்றிக்கொண்டிருந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் கழிவுப் பகுதி ஒன்று நிலவில் மோதியுள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 4 டன் எடைக் கொண்ட இந்த ராக்கெட்டின் உடைந்த பாகம் மணிக்கு சுமார் 8,700 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து நிலவின் மேற்பரப்பில் மோதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எதிர்பாராத விபத்து காரணமாக நிலவின் மேற்பரப்பில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு விண்வெளி ஆய்வாளர்கள் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிலவுக்கான விண்கலத்தைச் சுமந்து சென்ற பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாவது அடுக்கு பகுதியே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றி வந்தது. சூரியனின் செயல்பாடு மற்றும் ஈர்ப்பு விசைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த ராக்கெட் பகுதி மெல்ல விலகி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து மோதியுள்ளது. கடந்த காலங்களில் இது போன்ற சில விபத்துகள் நிகழ்ந்திருந்தாலும், நிலவின் மேற்பரப்பில் விண்கலக் கழிவுகள் மோதும் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அபூர்வமானவையாகக் கருதப்படுகின்றன.
இந்த விபத்தின் தாக்கத்தால் நிலவின் மேற்பரப்பில் எழும் தூசிகள் மற்றும் பாறைத் துகள்களை நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் தொலைநோக்கிகள் மூலம் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவிற்கு அனுப்பப்படும் விண்கலங்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு இது போன்ற விண்வெளி குப்பைகளால் ஏற்படும் ஆபத்துகளைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவியாக இருக்கும். விண்வெளியில் அதிகரித்து வரும் இதுபோன்ற குப்பைகளின் நடமாட்டம் எதிர்காலத்தில் பெரும் சவாலாக மாறும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.