ஸ்பெயினில் வரலாறு காணாத கடும் வெப்ப அலை பரவல்... 1028 பேர் பலி !
ஐரோப்பிய நாடுகளில் பருவநிலை மாற்றம் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் உயர்வு போன்ற பல்வேறு காரணிகளால் வரலாறு காணாத வகையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதில் குறிப்பாக ஸ்பெயினில் கடந்த ஜூன் மாதத்தில் வீசிய மிகக் கடுமையான வெப்ப அலை பாதிப்புகளால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்து போயுள்ளது. இந்த அதீத வெப்பத்தின் கொடுமை தாங்காமல் அங்கு இதுவரை 1028 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் கார்லோஸ் 3 சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த 1028 பேரின் மரண எண்ணிக்கையானது கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத வெப்ப அலையினால் உயிரிழந்த 407 பேருடன் ஒப்பிடுகையில் 2 மடங்குக்கும் அதிகமாகும். ஸ்பெயினின் தேசிய வானிலை நிறுவனமான ஏமெட் (Aemet) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் தான் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான மாதங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகள் தான் 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஸ்பெயினில் பதிவான மிகக் கடுமையான 2 வெப்ப நாள்கள் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரமான வெப்ப அலையின் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 73 விழுக்காடு மக்கள், அதாவது 35.7 மில்லியன் பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழலில் ஸ்பெயின் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் வெப்ப அலையால் நோய்வாய்ப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மதிய நேரங்களில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு அந்நாட்டுச் சுகாதாரத் துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.