விதிகளை மீறி ஸ்பேம் அழைப்பு... 1.24 லட்சம் செல்போன் எண்கள் துண்டிப்பு!

 

புதிய தேவையில்லாத மற்றும் தொந்தரவு தரும் விளம்பர அழைப்புகளைக் கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஒரே கட்டமாக லட்சக்கணக்கான எண்கள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில், பொதுமக்கள் தங்கள் கைப்பேசிகளில் எதிர்கொண்ட ஸ்பேம் அழைப்புகள் குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. 'டிராய் டி.என்.டி.' செயலி மூலமாகப் பொதுமக்கள் மொத்தம் 15.29 லட்சத்திற்கும் அதிகமான புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.

பெறப்பட்ட புகார்களைத் தீவிரமாக விசாரித்த அதிகாரிகள், வர்த்தக ரீதியான விதிமுறைகளை மீறித் தொடர்ந்து தொல்லை தந்து வந்த 1.24 லட்சம் செல்போன் இணைப்புகளை உடனடியாகத் துண்டித்து உத்தரவிட்டுள்ளனர். ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கத் தொலைத்தொடர்புத் துறையும், டிராயும் இணைந்து பல்வேறு புதிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளன.

விதிகளை மீறி நுகர்வோருக்குத் தொடர் தொல்லை கொடுத்து வந்த 374 வணிக நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும் அழைப்புகளுக்கு '1600' என்ற சிறப்பு எண் வரிசையும், டெலிவரி மற்றும் வணிகச் சேவைகளுக்கான அழைப்புகளுக்கு '1601' என்ற பிரத்யேக எண் வரிசையும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களை ஏமாற்றும் போலி அழைப்புகள் மற்றும் விளம்பரத் தொல்லைகளைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.