விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகத் தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்துத் தமிழகத்தின் பல்வேறு முக்கிய ஊர்களுக்குக் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வியாழக்கிழமை (செப். 10) 585 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (செப். 11) 1255 பேருந்துகளும், சனிக்கிழமை (செப். 12) 1030 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை (செப். 13) 650 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

கோயம்பேட்டிலிருந்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தலா 240 பேருந்துகளும், ஞாயிறன்று 105 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செப். 11 முதல் 13 வரை தினமும் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களில் இருந்து வரும் திங்கட்கிழமை (செப். 14 - விநாயகர் சதுர்த்தி) அன்று சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் 765 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த வார இறுதியில் பயணம் செய்ய வியாழக்கிழமை அன்று 8,666 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 32,171 பயணிகளும், சனிக்கிழமை அன்று 18,772 பயணிகளும், ஞாயிறன்று 11,177 பயணிகளும், திங்களன்று 23,740 பயணிகளும் இதுவரை முன்பதிவு செய்துள்ளனர்.

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC Mobile App மூலம் தங்களது பயணத்திற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களில் இயக்கத்தைக் கண்காணிக்கத் தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.