சொந்த ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்... வார விடுமுறையில்   தமிழகம் முழுவதும் 1475 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 

வார விடுமுறை நாள்களை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் சென்று வரத் தமிழகம் முழுவதும் மொத்தம் 1475 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இத்தகவலை அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி 410 பேருந்துகளும், ஜூலை 4 ஆம் தேதி 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஜூலை 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாதாவரத்திலிருந்து இதே நாள்களில் மொத்தம் 20 சிறப்புப் பேருந்துகள் வட மாவட்டப் பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் தனியாக இயக்கப்பட உள்ளன.

தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் வார விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குத் திரும்புவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகப் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து ஜூலை 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் 445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி தங்களின் பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டுள்ளது.