கோயில்களில் சிறப்பு தரிசனங்கள் ரத்து... "பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக் கூடாது" - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

பணத்தைச் செலுத்துபவர்களுக்கு மட்டும் தனியாகச் சிறப்புத் தரிசனம் வழங்குவது, மக்களிடையே பெரும் பாரபட்சத்தை உருவாக்குகிறது என்றும், எனவே அனைத்துக் கோயில்களிலும் கட்டண அடிப்படையிலான சிறப்புத் தரிசன முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இக்கோரிக்கை குறித்துத் தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் வருகிற மே 29-ஆம் தேதிக்குள் தங்களின் விரிவான பதிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கோயில்களில் வி.ஐ.பி மற்றும் கட்டணத் தரிசன முறைகளால் சாமானிய மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பணத்தின் அடிப்படையில் பக்தர்களை வேறுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

அதே வேளையில், மனிதாபிமான அடிப்படையில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு மட்டும் எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகச் சிறப்புத் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம் என்றும் தங்களின் இடைக்கால வழிகாட்டுதலில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக அமைச்சரவை மற்றும் அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.