இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்!

 

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் இன்று ஆகஸ்ட் 15 காலை 11 மணிக்குச் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உத்தரவின் பேரில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் அந்தந்த ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் இக்கூட்டங்கள் கூட்டப்படுகின்றன.

ஊராட்சிகளின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளின் செலவின அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வாசித்து ஒப்புதல் பெறப்படும்.

தூய்மையான குடிநீர் விநியோகம், சுகாதாரம், தெருவிளக்குகள் மற்றும் ஊரகச் சாலைப் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை திட்டம்), முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தூய்மைப் பாரத இயக்கம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும்.

இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றளிப்பு அடிப்படையிலான வீட்டு உரிமங்கள் மற்றும் வரி செலுத்தும் சேவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் மக்களாட்சியைப் பலப்படுத்தவும், கிராமங்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுக்கவும் கிராம சபைக் கூட்டங்கள் மிக முக்கியமான வழிமுறையாகும்.

எனவே, கிராமப்புற மக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஊரின் தேவைகள், கோரிக்கைகள் மற்றும் உரிமைகள் குறித்துக் குரல் கொடுத்துத் தீர்மானங்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ஊராட்சி அமைப்புகள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.