ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் - விசிக தேர்தல் அறிக்கை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்.14) வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இந்த அறிக்கையில், சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலனுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனி சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரசுத் துறையில் மட்டுமல்லாமல், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சமூக நீதியை உறுதிப்படுத்துவோம் என விசிக உறுதி அளித்துள்ளது. கல்வியைப் போல மருத்துவத்தையும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்றச் சட்டம் கொண்டு வரப்படும்.
சிறுபான்மை சமூகத்தினரைப் பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்யவும் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
"தமிழ் மண்ணில் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனத் தேர்தல் அறிக்கையில் மீண்டும் தனது நிலைப்பாட்டைத் திருமா உறுதிப்படுத்தியுள்ளார்.