இன்று விஜய் வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை.. நாகூர் தர்காவிலும் ‘துவா’ செய்கிறார்... மே 4ல் இருக்கு கச்சேரி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அன்னை வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு இன்று (மே 2) புனிதப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் காலையிலேயே வேளாங்கண்ணி பேராலயத்தில் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களுக்கு அவர் மனதார நன்றிகளைத் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் மக்களுடனேயே இருப்பேன் என்றும், மக்களைத் தொடர்ந்து சந்திப்பேன் என்றும் அவர் தனது தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்தார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகத் தொடர் ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டு வரும் விஜய், ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் சீரடிக்குச் சென்று சாய்பாபா கோவிலிலும் வழிபாடு நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் 5 மணி அளவில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும், வேளாங்கண்ணி வழிபாட்டை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு நாகூர் தர்காவிற்கும் சென்று அவர் துவா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
விஜய்யின் இந்தத் திடீர் ஆன்மிகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் தேர்தலைச் சந்தித்துள்ள அவர், அனைத்து மதத் தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்துவது சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாகப் பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை நெருங்கும் வேளையில், வெற்றிக்கான ஆசியைப் பெறவே அவர் இத்தகைய பயணங்களை மேற்கொண்டு வருகிறார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்று விஜய் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் வரவிருப்பதை ஒட்டி, அந்தப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.