எழும்பூர் - கன்னியாகுமரி உட்பட 7 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு... தெற்கு ரயில்வே !
எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - போடிநாயக்கனூர் வழித்தடங்கள் உள்பட மொத்தம் 7 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடனும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06059) வருகிற 12ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரில் இருந்து தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (06060) வருகிற 13ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரயில் (06045) நாநாளைய தினம் (4ஆம் தேதி) முதல் 25ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வரும் சிறப்பு ரயில் (06046) வருகிற 6ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.