நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு தொடக்கம்!

 

ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் தங்கியிருக்கும் தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாகச் சிறப்பு ரயில்களைத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் விபரங்கள்: சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. நெல்லையிலிருந்து சென்னை (வண்டி எண்: 06070): ஏப்ரல் 9-ம் தேதி (நாளை, வியாழக்கிழமை) இரவு 11:40 மணிக்குத் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை சென்னை எழும்பூரை அடையும்.

சென்னையிலிருந்து நெல்லை (வண்டி எண்: 06069): ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 12:30 மணிக்குச் சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, அன்றைய தினமே இரவு திருநெல்வேலி சென்றடையும்.

சென்னை - தூத்துக்குடி அதிவிரைவு சிறப்பு ரயில்:

தூத்துக்குடி மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்காக அதிவிரைவு சிறப்பு ரயில்கள் (Superfast Special) இயக்கப்படுகின்றன. சென்னை - தூத்துக்குடி (வண்டி எண்: 06151): ஏப்ரல் 13-ம் தேதி இரவு 11:50 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் தூத்துக்குடியைச் சென்றடையும்.

தூத்துக்குடி - சென்னை (வண்டி எண்: 06152): ஏப்ரல் 14-ம் தேதி (தமிழ் புத்தாண்டு அன்று) மதியம் 3:30 மணிக்குத் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பண்டிகை கால நெரிசலைத் தவிர்க்க விரும்பும் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில்வே முன்பதிவு மையங்கள் வாயிலாகத் தங்களது பயணத்தைச் சீக்கிரம் உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.