undefined

வன்முறையைத் தூண்டும் வகையில் பேச்சு... வழக்கில் இருந்து திருமாவளவன் விடுவிப்பு - உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

 

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு வன்முறையைத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து திருமாவளவனை விடுவிக்கப் புதுச்சேரி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, புதுச்சேரி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, வன்முறையைத் தூண்டியதாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில் இருந்து திருமாவளவனை முழுமையாக விடுவித்து (Acquittal) உத்தரவிட்டார். கடந்த சில மாதங்களாகவே திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்துப் பெண்கள் குறித்த அவதூறு வழக்கு மற்றும் தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குகளும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தத் தீர்ப்பு விசிக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.