‘வேகம் போதாது; வியூகத்தை மாற்றணும்”... விஜய் அதிருப்தி.. அவசர ஆலோசனை கூட்டம்... நிர்வாகிகளுக்கு ‘க்ளாஸ்’ எடுக்கத் திட்டம்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி விவகாரங்கள் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைச் சரிசெய்ய, சென்னையில் ஒரு பிரம்மாண்ட அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக வேட்பாளர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற புகார் தலைமையிடம் எழுந்துள்ளது. பல தொகுதிகளில் நிர்வாகிகள் தேர்தல் களப்பணிகளில் தீவிரம் காட்டாமல் இருப்பதும், வேட்பாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததும் விஜய்யை அதிருப்தியடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் தனித்து விடப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க விஜய் முடிவு செய்துள்ளார். இந்தச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற 'தாஜ்' ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் தவெக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் என சுமார் 800 பேர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் விஜய் நேரடியாகத் தலைமையேற்று, தேர்தல் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஒவ்வொரு நிர்வாகியிடமும் தனித்தனியாக விளக்கம் கேட்கவுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நிர்வாகிகளைத் தட்டி எழுப்பி, களப்பணிகளை முடுக்கிவிடுவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.