தமிழ்நாட்டில் விமான சேவைகளை முழுமையாக நிறுத்தியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!
தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் கடந்த சில ஆண்டுகளாகப் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போயுள்ளது. இதனால் லாபம் குறைவாக உள்ள வழித்தடங்களையும், செயல்பாட்டுச் செலவுகள் அதிகமாக இருக்கும் வழித்தடங்களையும் அந்த நிறுவனம் படிப்படியாகக் கைவிட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இருந்து இயக்கப்பட்டு வந்த உள்நாட்டு விமானச் சேவைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டன. மேலும் மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட சர்வதேச விமானச் சேவையும் நான்கு மாதங்களுக்கு முன்பே முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினசரி இயக்கப்பட்டு வந்த சென்னை முதல் கர்நாடக மாநிலம் சிவமோகா வரையிலான விமானச் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த இறுதி முடிவின் காரணமாகத் தமிழ்நாட்டில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் இந்த நிறுவனத்தின் விமானங்கள் இனி இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாகப் பயணிக்கும் பயணிகள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதோடு, இந்த முடிவு விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.