கே.எப்.சி-யில் கெட்டுப்போன சிக்கன் விநியோகம்? கர்நாடகாவில் அடுத்தடுத்து விஷமாகும் உணவுகள்!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள பிரபல கே.எப்.சி (KFC) உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு குடோனுக்குச் சீல் வைத்துள்ளனர்.
மங்களூரு கே.எ.ராவ் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாக கே.எப்.சி உணவகத்தில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிய சிக்கன் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாகச் சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவகத்தின் சமையலறை, சேமிப்புக் கிடங்கு மற்றும் உணவுப் பொருட்களைப் தீவிரமாக ஆய்வு செய்தனர். அங்கிருந்த சிக்கன் மற்றும் பிற உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆய்வு முடிவடையும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கே.எப்.சி உணவகத்தின் சேமிப்புக் கிடங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆய்வக அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு சுகாதாரம் மற்றும் பராமரிப்பை உறுதி செய்யக் கே.எப்.சி, ஸ்டார்பக்ஸ், பீட்சா ஹட், பர்கர் கிங் போன்ற பிரபல பன்னாட்டு உணவு நிறுவனங்களின் கிளைகளிலும் அதிகாரிகள் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதே போல மகாராஷ்டிராவிலும் விரைவு டெலிவரி நிறுவனங்கள் மற்றும் பிரபல உணவகங்களில் உணவுப் பொருட்களைச் சேமிக்கும் முறைகள் குறித்துச் சோதனைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.