ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய வீரர்களைத் தயார்படுத்த ரூ.800 கோடி வரை செலவு - விளையாட்டு அமைச்சகம் தகவல்!
ஜப்பானில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களைத் தயார்படுத்தும் பணிகளுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.800 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆண்டு போட்டி மற்றும் பயிற்சி காலண்டர் திட்டத்தின் கீழ் வீரர்களின் பயிற்சி மற்றும் உபகரணங்களுக்காக ரூ.702.86 கோடியும், ஒலிம்பிக் பதக்கத் திட்டத்தின் மூலம் கூடுதலாக ரூ.97.84 கோடியும் என ஒட்டுமொத்தமாகச் சேர்த்து சுமார் ரூ.800.70 கோடி செலவிடப்பட்டுள்ளது.
வீரர்களுக்கு வெளிநாடுகளில் சிறந்த பயிற்சி மற்றும் சர்வதேச போட்டி அனுபவங்களை வழங்குவதற்காக அதிகபட்சமாக ரூ.251.4 கோடியும், உள்நாட்டு பயிற்சிகளுக்காக ரூ.118.3 கோடியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கவுள்ள 501 பேர் கொண்ட இந்திய அணியில் 267 ஆண்களும், 234 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மொத்தம் 36 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்குகின்றனர்.
அரசின் அடிமட்ட விளையாட்டு மேம்பாட்டுத் திட்டமான 'கேலோ இந்தியா' மூலம் தேர்வு செய்யப்பட்ட 65 இளம் வீரர்களும் இந்தத் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும், விளையாட்டு அறிவியல் வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 265 பேர் கொண்ட உதவிப் பணியாளர்களும் உடன் செல்கின்றனர்.