தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு.. திருப்பூரில் சோகம்!
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள தேவராயம்பாளையம் பகுதியில் அதிகாலை ஒரு புள்ளிமான் தெருநாய்களால் கடித்துக் கொல்லப்பட்டது. கோடை வெயில் காரணமாக நிலவும் கடும் வறட்சியே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.
தேவராயம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், அதிகாலை 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு புள்ளிமானைச் சூழ்ந்து கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. மானின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், நாய்களை விரட்டியடித்து மானை மீட்டனர். இருப்பினும், உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அந்த மான், மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த மானின் உடலைக் கைப்பற்றினர். கால்நடை மருத்துவர்கள் மூலம் மான் உடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர், வனத்துறை விதிமுறைகளின்படி மானின் உடல் காட்டுப்பகுதியில் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டது.
வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், காடுகளில் நீர்நிலைகள் வற்றிவிட்டன. இதனால் கோதைபாளையம் காட்டுப் பகுதியில் இருந்து தண்ணீரைத் தேடி இந்த மான் ஊருக்குள் வந்துள்ளது. அப்போது ஊருக்குள் இருந்த தெருநாய்கள் மானைத் துரத்திச் சென்று கடித்துக் கொன்றுள்ளன.
விலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கவும், அவற்றின் தாகத்தைத் தீர்க்கவும் இயற்கை ஆர்வலர்கள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோதைபாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஆங்காங்கே சிமெண்ட் தொட்டிகளை அமைத்து, அதில் வனத்துறை மூலம் தொடர்ந்து தண்ணீர் நிரப்ப வேண்டும். வன எல்லையோர கிராமங்களில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.