பரபரப்பு... 30 அடி ஆழக் கிணற்றில் விழுந்த 3 புள்ளிமான்கள் மீட்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோடங்கால் கிராமத்தில், கிணற்றில் விழுந்த 3 புள்ளிமான்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த கெங்கராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில், இரை தேடி வந்த ஒரு வயது மதிக்கத்தக்க 3 மான்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாகத் தவறி விழுந்தன. கிணற்றுத் தண்ணீரில் மான்கள் தத்தளிப்பதைப் பார்த்த உரிமையாளர், உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான வீரர்கள், துரித நடவடிக்கையில் இறங்கினர். கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 மான்களையும் காயமின்றி லாவகமாகப் பிடித்தனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மான்கள் அனைத்தும் பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டன.
மீட்கப்பட்ட புள்ளிமான்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. வனத்துறையினர் அந்த மான்களுக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை வழங்கிய பின், அவை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டன. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசித செயலையும், துரிதமான மீட்புப் பணியையும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.