சரஸ்வதி தேவிக்கே குருவான ஸ்ரீ ஹயக்ரீவர்: இன்று ஹயக்ரீவர் ஜெயந்தி - வழிபாட்டு முறைகளும், பலன்களும்!

 

கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ ஹயக்ரீவர், இந்து புராணங்களில் ஞானம், கல்வி மற்றும் வித்தைகளின் அதிபதியாகப் போற்றப்படுகிறார். தமிழில் இவரை 'பரிமுகன்' அல்லது 'ஹயமுகன்' என்றும் அழைப்பர். 'பரி' மற்றும் 'ஹயம்' என்றால் குதிரை என்றும், 'க்ரீவ' என்றால் கழுத்துப் பகுதி என்றும் பொருள்படும். அதற்கேற்ப, மனித உடலும் குதிரை முகமும் கொண்ட கோலத்தில் இவர் காட்சி அளிக்கிறார்.

மது மற்றும் கைடபன் என்ற அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைக் கவர்ந்துச் சென்று பாதாள லோகத்தில் மறைத்து வைத்தனர். உலகைப் படைக்கும் பிரம்மாவின் பணி தடைபட்டதால், தேவர்கள் மகா விஷ்ணுவிடம் முறையிட்டனர். அதையடுத்து விஷ்ணு பகவான் ஹயக்ரீவ அவதாரம் எடுத்து, அசுரர்களை வதம் செய்து வேதங்களை மீட்டு மீண்டும் பிரம்ம தேவனிடம் ஒப்படைத்தார்.

லக்ஷ்மி ஹயக்ரீவர் தனது இடது தொடையின் மீது மகாலட்சுமியை அமர்த்திய கோலத்தில் 'லக்ஷ்மி ஹயக்ரீவராக' காட்சியளிப்பதால், கல்வி மட்டுமின்றி செல்வத்தையும் வழங்கும் தெய்வமாக விளங்குகிறார்.

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

ஹயக்ரீவர் படத்திற்கு ஏலக்காய் மாலை சூட்டி, மேற்கண்ட ஸ்லோகத்தைப் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் 108 முறை உச்சரித்து வழிபடுவது வாழ்வில் சிறப்பான மேன்மையைத் தரும். கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் (திருவஹீந்திரபுரம்) மற்றும் செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் ஆகிய இடங்களில் இவருக்கென பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன.