இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 12 பேர் கைது; 5 நாட்களில் 34 பேர் கைது!
ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீனவர்களை விரட்டியடித்தனர்.
நான்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளைச் சிறைபிடிக்கும் நோக்கில் சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பல மீனவர்கள் தங்களது விலை உயர்ந்த வலைகளைக் கடலிலேயே வெட்டி வீசிவிட்டு தப்பினர். இதில் டேவிட்சன் என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
கைதான மீனவர்கள் 12 பேரும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மார்ச் 9-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 34 மீனவர்கள் மற்றும் 5 விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டுத் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை கடற்படையின் இந்தத் தொடர் அட்டூழியம் காரணமாகத் தமிழகக் கடலோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.