இலங்கை சிறையில் கலவரம்.., பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

 

இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியான நீர்க்கொழும்பில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையில், நேற்றிரவு  இந்தத் மோதல் தொடங்கியுள்ளது. சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஒரு கும்பலுக்கும், அதனை எதிர்த்த மற்றொரு விசாரணைக் கைதிகள் குழுவிற்கும் இடையே இந்தத் தகராறு வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலையில் இரண்டாவது நாளாகக் கலவரம் வெடித்த போது, கோபமடைந்த கைதிகள் சிலர் சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கில் இருந்து துப்பாக்கிகளைப் பறித்துத் தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை கட்டுக்கடங்காமல் போனது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் மற்றும் சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் இருதரப்பு மோதலில் இதுவரை 8 சிறை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உட்பட மொத்தம் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் நீர்க்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறைச்சாலையில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரச் சிறப்பு அதிரடிப்படையினரும்  ராணுவத்தினரும் அங்கு அதிரடியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய கைதிகள் 3 பேர் உடனடியாகப் பள்ளன்சேனை சிறை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து  இலங்கை நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இது குறித்து முழுமையான விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையரின் வழிகாட்டுதலின்படி, இந்த வன்முறைக்கான பின்னணி குறித்து ஒருபுறம் சிறப்பு விசாரணைக் குழுவும், மற்றொரு புறம் போலீசாரும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.