ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவித்ர உற்சவம்... திரளான பக்தர்கள் தரிசனம்!
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாள் பவித்ர உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
பவித்ர உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலிலும் பவித்ர உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
வைணவத் தலங்களில் ஆண்டுதோறும் முறைப்படி நடத்தப்படும் இந்த உற்சவம், கோயில்களில் அறியாமல் நேரும் பிழைகள் மற்றும் தோஷங்கள் நிவர்த்தி அடைவதற்காகச் செய்யப்படும் சிறப்பு வழிபாடாகும்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, யாகசாலையில் பிரத்யேகமாகப் பவித்ர மாலைகள் செய்யப்பட்டுப் பூஜிக்கப்படும். பின்னர் அந்தப் புனித மாலைகள் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.