ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம்... தவெக எம்எல்ஏ சரவணனை பதவி நீக்கம் செய்ய உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் பெண் ரசிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசை நோக்கிக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணனின் நெருங்கிய நிர்வாகிகள் இருவர், அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்குத் துணையாகச் செயல்பட்டதாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றபோது, எம்எல்ஏ சரவணன் தலையிட்டுப் புகாரைத் திரும்பப் பெறக் கோரி சமரசம் பேச முயன்றதாக அந்தப் பெண் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற சம்பவங்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.