ஸ்டாலின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்... கன்னியாகுமரி புதிய எஸ்.பி. நியமனம், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - அரசாணை வெளியீடு!

 

தமிழகத்தில் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை மாற்றிப் புதிய நியமனங்களை மேற்கொண்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக, நெல்லை மாநகர மேற்குப்பிரிவு துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றிய அன்ஷல் நாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு கன்னியாகுமரி எஸ்பியாகப் பணியாற்றிய ஸ்டாலின் ஐபிஎஸ் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளராகப் பணியாற்றிய பி.சங்கர் ஐஏஎஸ், தொல்லியல் துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை தொல்லியல் துறை ஆணையர் பொறுப்பைக் கூடுதலாக கவனித்து வந்த வி.பி.ஜெயசீலனுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.சங்கர் ஐஏஎஸ் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை செயலாளர் பொறுப்பு, தற்போது சமூகநீதி துறை செயலாளராக உள்ள டாக்டர் என்.சுப்பையன் ஐஏஎஸ்-க்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.