திராவிட மாடலுக்கு பலத்த அடி... சொந்த தொகுதியிலேயே முதல்வர் ஸ்டாலின் படுதோல்வி!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சென்னையின் மிக முக்கியமான நட்சத்திரத் தொகுதியான கொளத்தூரில் பெரும் அரசியல் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. திமுக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியிலேயே பின்னடைவைச் சந்தித்து தோல்வி அடைந்திருப்பது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியிருப்பது தெளிவாகியிருக்கிறது. ஆளுங்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மாபெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குப் பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் பலமான முன்னிலையில் உள்ள நிலையில், தற்போது முழு வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், ஸ்டாலின் படுதோல்வியை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

முதலமைச்சரே பின்னடைவைச் சந்தித்துள்ள தகவல் வெளியான உடனே கொளத்தூர் பகுதி முழுவதும் தவெக தொண்டர்கள் விசில்களை ஊதி உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், தங்களது தலைவரின் பின்னடைவால் திமுகவினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்துக்கொண்டிருக்கிறது.