"ஸ்டாலின் நவீன கால ஹிட்லர்.. வரலாற்றின் துரோக பக்கங்களில் இடம்பெறுவார்!" - அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!

 

மகளிர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த மசோதாவைத் திட்டமிட்டு வீழ்த்தியதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். "வரலாற்றின் துரோகப் பக்கங்களில் ஸ்டாலின் இடம் பெறுவார்; அவரை மகளிர் சமுதாயம் மன்னிக்காது" என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீண்ட காலப் போராட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து முறியடித்துள்ளதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். "சமூக நீதி பேசும் திமுகவின் டி.என்.ஏ-விலேயே பெண்களுக்கு எதிரான வன்மம் உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் தொகுதிகள் குறையும் என்று ஸ்டாலின் கூறியது வெறும் 'பிடிவாதம்' என்று கூறிய அன்புமணி, தமிழகத்தின் தொகுதிகள் 59-ஆக உயரும் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் உறுதியளித்த பின்னும் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டதாகக் கூறியுள்ளார். "பெண்கள் அடுப்பூதும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்ற பெண்ணடிமை புத்தியால் தான் ஸ்டாலின் இந்தச் சட்டத்தை வீழ்த்தியுள்ளார்" என அவர் அதிரடியாகப் பேசியுள்ளார்.

இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடியதைச் சுட்டிக்காட்டிய அன்புமணி, "யூதர்களைக் கொன்று குவித்ததைக் கண்டு மகிழ்ந்த சர்வாதிகாரி ஹிட்லரின் சாடிச மனப்பான்மைக்கும், ஸ்டாலினின் இந்த நவீன கால சாடிசத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை" என ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

"இந்த மசோதா மட்டும் நிறைவேறியிருந்தால், இன்னும் 3 ஆண்டுகளில் 20 தமிழகப் பெண்கள் நாடாளுமன்றத்தை அலங்கரித்திருப்பார்கள். அந்த வரலாற்று வாய்ப்பைக் கெடுத்த ஸ்டாலினைத் தமிழக மக்கள் வரும் தேர்தலில் நிச்சயம் தண்டிப்பார்கள்" என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.