"எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்" -  அமைச்சர் நிர்மல்குமார்

 

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக எம்.எல்.ஏ-க்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேரடித் தூண்டுதலின் பேரில் தான் இந்த சதித் திட்டங்கள் அரங்கேறி வருகின்றன என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல்குமார், "ஆளுங்கட்சியான தவெக-வின் மக்கள் செல்வாக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆசியோடு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் முழுமையான தூண்டுதலின் பேரில் தான் இந்த ரூ.180 கோடி குதிரைப்பேரச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது," என அவர் சாடியுள்ளார்.

தவெக-வின் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரையும் பண பலத்தாலோ அல்லது அதிகார பலத்தாலோ அசைத்துப் பார்க்க முடியாது என்றும், கொள்கை பலம் கொண்ட தவெக எம்.எல்.ஏ-க்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

"தமிழகத்தில் தற்போதைய சூழலில் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்பட்டாலும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நல்லாட்சிக்கு ஆதரவாக மக்கள் 100 சதவீதம் தவெக-விற்கே மீண்டும் அசுர பெரும்பான்மையைத் தருவார்கள். மக்கள் பலம் எங்களிடம் இருக்கும் போது, திமுக-வின் இத்தகைய திரைமறைவு கார்ப்பரேட் வேலைகள் எங்களிடம் பலிக்காது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது" என்றார்.