மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்... வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...  தோல்விக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்; வெற்றி பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஏராளமான நற்பணிகளைச் செய்த போதிலும், தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக அமையாததை அவர் கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தனது அரசியல் பயணத்தில் எண்ணற்ற வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்தவன் நான் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், தங்களுக்கு லட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் நிரந்தரமல்ல என்று தெரிவித்துள்ளார். திமுகவின் அரசியல் பயணம் எவ்விதத் தொய்வுமின்றித் தொடரும் என்றும், இதுவரை ஒரு பொறுப்பான ஆளுங்கட்சியாகச் செயல்பட்ட திமுக, இனி ஒரு சிறந்த எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்தில் தனது கடமையைச் செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், தேர்தல் களத்தில் தங்களோடு தோளோடு தோள் நின்ற கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி கூறிய அவர், தனது மனச்சாட்சிக்கு உண்மையாகச் சக்தியை மீறி உழைத்ததாகப் பதிவிட்டுள்ளார். இக்கட்டான இந்தத் தருணத்திலும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த முதிர்ச்சியான பதிவு அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.