கொளத்தூரில் மக்களைச் சந்தித்த ஸ்டாலின்... கண்ணீர் விட்டு அழுத சேகர்பாபு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுக-விற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அந்தத் தொகுதிக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை கொளத்தூரில் வெற்றி பெற்று வந்த மு.க.ஸ்டாலின், இந்த முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 9,121 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் மொத்தம் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,109 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 72,988 வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கண்டு வந்த ஸ்டாலினின் அந்த வெற்றிப் பயணத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், "அன்பு கொளத்தூர் மக்களே, உங்களுக்காகப் பணியாற்ற எனக்கு மூன்று முறை வாய்ப்பளித்தீர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறந்த பணிகளைச் செய்துள்ளேன். இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தாலும், வாக்களித்தவர் மற்றும் வாக்களிக்காதவர் என அனைவருக்கும் என்றும் உங்களில் ஒருவனாக இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி கூறுவதற்காக அவர் இன்று மாலை கொளத்தூர் சென்ற நிலையில், சேகர்பாபு கண்ணீர் விட்டு அழுதார்.