ஸ்டாலின் சொன்னால்தான் ஆதரவு... தவெக-விற்கு ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் அதிர்ச்சி பதில்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவைக் கோரி தவெக-வின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக ஆட்சி அமைக்கத் தங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.
தவெக-வின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்த காதர் மொய்தீன், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதைத்தான் தங்களது கட்சி பின்பற்றும் எனத் தெரிவித்துள்ளார். "திமுக தலைவர் சொன்னால் மட்டுமே தவெக-விற்கு எங்களால் ஆதரவு தர முடியும், அதுவரை ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை" என அவர் அருண்ராஜிடம் நேருக்கு நேராகவே கூறித் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த அதிரடி பதில் தவெக வட்டாரத்திலும், அக்கட்சியின் தலைவர் விஜய் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களையும் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்துச் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், மற்ற கூட்டணி கட்சிகள் திமுக-வின் நிலைப்பாட்டையே தங்களது முடிவாக அறிவித்து வருவது தவெக-விற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் அடுத்த சில நாட்களுக்கு உச்சகட்டப் பரபரப்புடன் காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.