ஸ்டாலின், வைகோவை அடுத்து சீமானை நேரில் சந்தித்து ஆசி பெறும் முதல்வர் விஜய்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று (மே 11) காலை முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்ற அவர், அதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். இந்தத் தொடர் சந்திப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆரோக்கியமான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்களுடனான இந்த மரியாதை நிமித்தமான சந்திப்புகளின் ஒரு பகுதியாக, இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் இல்லத்திற்குச் செல்லும் விஜய், அங்கு அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார். நீண்ட காலமாக விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றுப் பேசி வந்தவர் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிரெதிர் துருவங்களாகப் பார்க்கப்படும் தலைவர்களை முதலமைச்சர் விஜய் பண்போடு அணுகுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது மாநிலத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் தமிழ் உணர்வு சார்ந்த விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நீலாங்கரை பகுதியில் முதலமைச்சரின் வருகையை ஒட்டிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.