ஸ்டாலின் தோல்வியால் அதிர்ச்சி... திமுக தொண்டர் தற்கொலை முயற்சி!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த செய்தி கேட்டுத் தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த திமுக தீவிரத் தொண்டர் ஒருவர், இந்தத் தோல்வியைத் தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் அபி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் திமுகவின் தீவிர விசுவாசியாகவும் இருந்து வந்துள்ளார். நேற்று வெளியான தேர்தல் முடிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தகவலைக் கேட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளான அபி, அருகில் இருந்த தேநீர் கடையில் கண்ணாடி டம்ளரை உடைத்துத் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய விபரீத முடிவுகளைத் தொண்டர்கள் எடுக்க வேண்டாம் என அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.