நாடு முழுவதும் செப்.1 முதல் விமான நிலையங்களில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் முறை ரத்து!

 

இந்தியாவிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, குடிவரவு மையங்களில் போர்டிங் பாஸில் முத்திரை குத்தும் நடைமுறையை வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேசப் பயணிகள் இனித் தங்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ள இ-போர்டிங் பாஸைக் காண்பித்தே குடிவரவுச் சோதனையைக் கடக்கலாம். நேரடியாக அச்சடிக்கப்பட்ட காகித போர்டிங் பாஸ்களையும் தொடர்ந்து பயன்படுத்தலாம்; ஆனால், அவற்றிலும் இனி முத்திரைகள் குத்தப்பட மாட்டாது.

போர்டிங் பாஸில் முத்திரை குத்துவதால் நேரம் விரையமாவதுடன், பயணிகள் பல சிரமங்களைச் சந்திப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. முறையற்ற அல்லது தவறான முத்திரையிடலால் தரவுகளைப் படிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவுப் பணியகம் எடுத்துள்ள இந்த முடிவால் விமான நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டுப் பயண நேரம் மிச்சமாகும். மேலும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பாஸ்போர்ட்டில் என்ட்ரி/எக்சிட் முத்திரை குத்துவதையும் முழுமையாகத் தவிர்க்கும் திட்டம் குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.