புது கட்சித் துவக்கமா? - இன்று பகல் 12 மணிக்கு மக்களுடன் மனம் திறந்து பேசுகிறார் அண்ணாமலை!
பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை புதுக்கட்சி துவங்கப்போவதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "இன்று பகல் 12 மணிக்கு மக்களுடன் மனம் திறந்து பேசுகிறேன். அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்" என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது 'எக்ஸ்' தளத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு, அஇஅதிமுக-வுடன் கூட்டணி வைப்பதற்காகப் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை அதிரடியாக நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவராகப் பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தேர்தலைச் சந்தித்தது.
ஆனால், அஇஅதிமுக-விடம் 27 இடங்களைப் பெற்றுப் போட்டியிட்ட பாஜக, வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று மிக மோசமான தோல்வியைத் தழுவியது. நட்சத்திர வேட்பாளர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் தோல்வியடைந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவீதமாக இருந்த பாஜக-வின் வாக்கு வங்கி, வெறும் 2 சதவீதமாகச் சரிந்து போனது தமிழக பாஜக-வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென டெல்லிக்கு விசிட் அடித்தார். அவர் தனது ராஜினாமா முடிவை அறிவிக்கவே டெல்லி சென்றதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் ரெக்கை கட்டிப் பறந்தது.
அதற்கேற்ப, டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து 5 பக்கங்கள் கொண்ட பரபரப்பு கடிதம் ஒன்றை அண்ணாமலை அளித்தார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள், "அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், காத்திருக்கவும்" என்று அண்ணாமலையைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. எனினும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருந்ததால், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனையும் டெல்லிக்கு வரவழைத்துத் தேசியத் தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், நேற்று இரவு அண்ணாமலை குறித்து மிக முக்கியமான தகவல் ஒன்று அரசியல் வட்டாரத்தில் கசிந்தது. அதன்படி, பாஜக-வில் இருந்து முற்றிலும் விலகும் அண்ணாமலை, தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு புதிய 'மதசார்பற்ற' கொள்கை உடைய தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த கட்சி இயங்கும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று அவர் வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த மக்களுக்கு நன்றி கூறி அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு, இந்த புதிய கட்சித் தொடங்கும் வதந்திகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. "எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்திய அன்பு உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள். உங்களின் அன்பும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தை எனக்கு வழங்கியுள்ளன. உங்கள் அனைவரையும் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இன்று பகல் 12 மணிக்கு மனம் திறக்கிறேன்"
பாஜக-விலேயே நீடிப்பாரா அல்லது திராவிட மண்ணில் புதிய இளைஞர் பட்டாளத்துடன் தனிக்கட்சி பிரகடனம் செய்வாரா அண்ணாமலை? ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தின் பார்வையும் இன்று பகல் 12 மணியை நோக்கித் திரும்பியுள்ளது!