பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி.. 3 நாட்களில் ₹7 லட்சம் கோடி அவுட் - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

 

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் பலவீனமான காலாண்டு முடிவுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று பெரும் சரிவுடன் நிறைவடைந்தது. கடந்த மூன்று வணிக நாட்களாகத் தொடர்ந்து வரும் இந்தச் சரிவு, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை பெருமளவு குறைத்துள்ளது.

வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 983.89 புள்ளிகள் (1.27%) சரிந்து 76,680 நிலைக்குக் கீழ் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 275.10 புள்ளிகள் (1.14%) வீழ்ச்சியடைந்து, முக்கிய ஆதரவு நிலையான 24,000-ஐத் தகர்த்து 23,897 புள்ளிகளில் முடிவடைந்தது.

பங்குச்சந்தையின் இந்தத் தொடர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிக அதிகம்.  ஒரே நாளில் பிஎஸ்இ (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் சுமார் ₹4 லட்சம் கோடி குறைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்செக்ஸ் சுமார் 2,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால், முதலீட்டாளர்கள் சுமார் ₹7 லட்சம் கோடி இழந்துள்ளனர்.

ஈரான் - அமெரிக்கப் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $106-ஐத் தாண்டியது. இது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் ஹெச்.சி.எல் டெக் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்த கணிப்புகள் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்ததால், ஐடி துறை குறியீடு 5% வரை சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹94.25 ஆக சரிந்தது சந்தையை மேலும் பலவீனப்படுத்தியது.