அதிகாரிகள் மீது கல்வீச்சு... விருதுநகரில் பதற்றம்... சோலார் ஆலை நில அளவீட்டுக்கு எதிர்ப்பு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சோலார் மின் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக நிலத்தை அளவிட வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கிராம மக்கள் திடீரெனக் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரியாபட்டி அருகே உள்ள சூரனூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் மின் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக 41 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது: இந்தத் தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், காரியாபட்டி துணைத் வட்டாட்சியர் (டெபுடி தாசில்தார்) ஜெயராஜ் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகளும் தனியார் நிறுவனப் பிரதிநிதிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளப்பதற்காகச் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதிகாரிகள் வந்த தகவலையறிந்து கோவிலாங்குளம், உடுப்புகுளம், ஆவரம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் அங்கு திரண்டு நில அளவீட்டுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சோலார் ஆலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம் தங்களின் முக்கிய விவசாய நிலம் என்றும், அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கான நீர்வரத்துப் பாதையைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இந்தச் சோலார் திட்டம் அமைக்கப்பட்டால் கண்மாய்க்குத் தண்ணீர் வருவது முற்றிலுமாகத் தடைபடும் என்றும், சுற்றுவட்டார விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நிலத்தை அளக்க வந்த அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் மீது திடீரெனக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்:
இதனால் அங்கு பெரும் கலவரச் சூழல் உருவானது. உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கிராம மக்களைத் தடுத்து நிறுத்தி, வருவாய்த் துறை அதிகாரிகளைப் பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சூரனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.