undefined

“சங்கீதாவை இழிவுபடுத்துவதை நிறுத்துங்க...” - விஜய்க்கு மாதர் சங்கம் கடும் கண்டனம்!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், சங்கீதாவுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆபாசமான மற்றும் இழிவான பதிவுகளைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய்-சங்கீதா இணையர்களின் விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்துத் தவெக தொண்டர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன. விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், தவெக தொண்டர்கள் சிலர் ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் சங்கீதாவின் படங்களைக் கேலி சித்திரங்களாகவும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் இழிவுபடுத்தி வருகின்றனர்.

"தொண்டர்கள் இத்தகைய அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டும், கட்சித் தலைவர் விஜய் மௌனம் காப்பது மிகப்பெரிய தவறு" என்று மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா மற்றும் பொதுச் செயலாளர் அ. ராதிகா ஆகியோர் தெரிவித்துள்ளனர். விவாகரத்து என்பது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட சட்ட நடைமுறை. இதில் மூன்றாம் நபர்கள் தலையிட்டு ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூக மாற்றத்திற்காக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்திப் பெண்களுக்கு எதிராக 'டிஜிட்டல் வன்முறை'யில் ஈடுபடும் தொண்டர்களை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற பதிவுகளைப் பதிவிடுபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மன உளைச்சல் மற்றும் சில தனிப்பட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.