கொடைக்கானலில் கெடுபிடி.. உடனடி அமல்.. ஆவணங்கள் இன்றி சுற்றுலாப் பயணிகள் தங்கத் தடை!
கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, உரிய அடையாளச் சான்றுகள் இன்றிச் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைக்கக் கூடாது எனக் காவல் துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொடைக்கானலில் உள்ள அனைத்து லாட்ஜ்கள் மற்றும் சொகுசு விடுதிகளில் தங்கும் பயணிகளிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட முறையான அடையாள ஆவணங்களைப் பெற்ற பிறகே அனுமதி வழங்க வேண்டும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் தங்க வைக்கும் முன்பு காவல் துறையிடம் முன்அனுமதி பெற வேண்டும் அல்லது அதுகுறித்த தகவலை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
விடுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க அனைத்துத் தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுச் சரியாக இயங்குவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னவனூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களிடம் இருந்து போதை ஸ்டாம்ப், ஹெராயின் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுலாப் பயணிகள் போல அறை எடுத்துத் தங்கி, இளைஞர்களுக்குப் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக இயங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.