இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மீறினால் கடும் நடவடிக்கை!

 

இன்று உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதியை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும், மதுக்கடைகள் மட்டுமின்றி, அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் கிளப்புகளில் உள்ள மதுக்கூடங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று ஒரு நாள் முழுவதும் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், இன்று மே 1ம் தேதி தமிழகத்தில் உள்ள சுமார் 5,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு போடப்படும். இந்த உத்தரவை மீறி யாராவது கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தாலோ அல்லது மறைமுகமாக மதுக்கடைகளைத் திறந்து வைத்தாலோ அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு நாள் முழுவதும் மதுக்கடைகள் இயங்காது என்பதால், நேற்று மாலையே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, வாரத்தின் இறுதி நாட்கள் நெருங்குவதாலும், தொடர்ந்து அடுத்தடுத்து 3 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதாலும் நேற்று இரவு வழக்கத்தை விட விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க டாஸ்மாக் கடைகள் முன்பு நேற்று போலீஸ் பாதுகாப்பும் காணப்பட்டது. 

இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், மதுப்பிரியர்கள் நேற்றே தங்களுக்குத் தேவையான 'ஸ்டாக்'கை வாங்கி வைத்துக் கொள்ளத் திரண்டிருந்தனர். பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.