தாராபுரத்தில் தவெக வேட்பாளருக்கு கடும் எதிர்ப்பு.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள்!
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் மற்றும் பெரியகுமாரபாளையம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவிடம், பொதுமக்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குண்டடம் மற்றும் பெரியகுமாரபாளையம் பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்யபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களில் சிலர் அவரிடம் சில கடுமையான கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, "நீங்கள் ரூ.50 கோடி பெற்றுக் கொண்டு தான் தவெகவில் இணைந்துள்ளீர்கள்; அதற்கு உரிய ஆதாரம் தர வேண்டும்" என்று பொதுமக்கள் நேரிடையாகக் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு உண்டானது.
பொதுமக்களின் இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாகப் பதிலளித்த வேட்பாளர் சத்யபாமா, தான் யாரிடமிருந்தும் எந்தப் பணமும் பெறவில்லை என்று கூறித் தனது குழந்தைகள் மீது சத்தியம் செய்து விளக்கம் அளித்தார். இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்ததால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அவர் அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையே, மடத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சத்யபாமாவுக்கு எதிராகக் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் போஸ்டர்களில், "தாராபுரம் மக்களின் கேள்வி: ஏன் இந்த ராஜினாமா? யார் சொல்லி இந்தத் துரோகம்? வெற்றி பெற்ற பின் தாராபுரம் மக்களை ஏன் கைவிட்டீர்கள் சத்யபாமா?" போன்ற கடுமையான வாசகங்கள் இடம்பெற்று அப்பகுதியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.