நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை - குன்றத்தூரில் துயரம்!

 

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே ப்ளஸ்-2 மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் ரேஷ்மா (17), அரசுப் பள்ளியில் படித்து முடித்துவிட்டுத் தற்போது மருத்துவக் கனவுடன் நீட் தேர்விற்குத் தயாராகி வந்தார்.

ரேஷ்மா அண்மையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவுக்காகக் காத்திருந்தார். இதற்கிடையில், தனது மருத்துவக் கனவை நனவாக்கத் தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். ஆனால், அங்குப் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாகவும், தன்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது தாய் மற்றும் சகோதரிகளிடம் ரேஷ்மா அடிக்கடி கூறி வருத்தப்பட்டுள்ளார். தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கடுமையான மன உளைச்சலில் அவர் இருந்துள்ளார்.

நேற்று வழக்கம் போலத் தனது அறைக்குச் சென்ற ரேஷ்மா, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவைத் தட்டியும் பதில் இல்லாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஜன்னல் கம்பியில் ரேஷ்மா தூக்கிட்ட நிலையில் உயிருக்கு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரேஷ்மா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த திருமுடிவாக்கம் போலீசார், மாணவியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மாணவியின் தற்கொலைக்கு நீட் தேர்வு பயம் தவிர வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளியில் படித்து மருத்துவருக்குக் கனவு கண்ட ஒரு ஏழை மாணவி, தேர்வு பயத்தால் விபரீத முடிவு எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், நீட் தேர்வுக்கு எதிரான விவாதத்தையும் மீண்டும் கிளப்பியுள்ளது.