கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே சோகம் - ரயில் மோதி மாணவி உயிரிழப்பு!
சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற 18 வயதுக் கல்லூரி மாணவி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, பொறியியல் கல்லூரியின் முதல் நாள் வகுப்பில் பங்கேற்பதற்காக ராஜஸ்ரீ (18) என்ற மாணவி மிகுந்த எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே பூட்டப்பட்டிருந்த ராதா நகர் ரயில்வே கேட்டைக் கடந்து செல்ல முயன்றபோது, அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மாணவி மீது மோதியது.
ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த மாணவி ராஜஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரிக்குச் சென்ற முதல் நாளிலேயே நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.